Oct 3, 2011

11

அயல் தேசத்து அநாதை

  • Oct 3, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: உதாரணமாய் நடப்பதே சிறந்த போதனை.

    வணக்கம் நண்பர்களே பொதுவாகவே கவிதைகளை பொருத்தவரை பத்து பக்கத்தில் எழுதி புரிய வைக்க வேண்டிய விஷயத்தை வெறும் பத்து வரிகளுக்குள் எழுதி சாட்டையில் அடித்தாற் போல புரிய வைத்துவிடும். இப்படித்தான் இந்த கவிதையும் இருக்க போகிறது ஒவ்வொரு வரியிலும் ஏக்கமும், சோகமும், விரக்தியும் ஒவ்வொரு வரிகளிலிலும் தெறிக்க போகிறது.. முகம் அறியா நண்பர் வழியாக வந்தடைந்த ’ஒரு சிறு கவிதையை’, வெளிநாட்டு நண்பர்களுடன் கிடைத்த கலந்துரையாடலாலும் அவர்களுடான பேச்சின் போதான மனநிலையையும் மனதில் உருவகபடுத்தி என் அரைகுறை கவிதை ஞானத்தோடு எழுதியதை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.

    என் மற்ற கவிதைகளை படித்து ரசித்தவர்கள், இந்த கவிதையை படித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், நடைமுறை வாழ்க்கையில் அவர்களை நேசிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள், அவர்களும் மனிதர்களே!ஆம் உணர்ச்சிகளை மாற்றி வைத்த மனிதர்கள்!.

    அயல் தேசத்து அநாதை



    இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
    வந்தவனுக்கோ சென்று விட ஆசை
    இதோ
    அயல்தேசத்து அநாதைகளின் ..
    கண்ணீர் கதை !

    விசாரிப்புகளோடும்
    எதிர்பார்ப்புகளுடனும் வருகின்ற ...
    தொலைபேசி அழைப்புகளை நினைத்து
    பரிதாபப்படத்தான் முடிகிறது !

    நாங்கள் பூசிக்கொள்ளும்
    நறுமணத்தில் வேண்டுமானால்...
    வாசனைகள் இருக்கலாம்!
    ஆனால் வாழ்க்கையில்...?
    வசந்தமில்லாமால் தான் தவிக்கிறோம்!

    தூக்கம் விற்ற காசில்தான்...
    துக்கம் அழிக்கின்றோம்!
    ஏக்கம் என்ற நிலையிலேயே...
    இளமை கழிக்கின்றோம்!

    எங்களின்
    நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
    ஒரு
    விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு!

    கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
    கடல் தாண்டி வந்திருக்கிறோம் !
    மர உச்சியில் நின்று ...
    ஒரு
    தேன் கூட்டை கலைப்பவன் போல!

    அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
    எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
    இங்கே
    அலாரத்தின் எரிச்சல் கேட்டு
    எழும் நாட்கள் கசந்து விட்டன!

    பழகிய வீதிகள்
    பழகிய நண்பர்கள்
    கல்லூரி நாட்கள்
    தினமும்
    ஒரு இரவு நேர
    கனவுக்குள் வந்து வந்து
    காணாமல் போய்விடுகிறது!

    நண்பர்களோடு
    ஆற்றில் பிடித்த மீன்
    பம்பரம் - சீட்டு - கோலி என
    சீசன் விளையாட்டுக்கள் !

    இவைகளை
    நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
    விசாவும் பாஸ்போட்டும் வந்து...
    விழிகளை நனைத்து விடுகிறது.!

    வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த
    நண்பர்களின் திருமணத்தில் !
    மாப்பிள்ளை அலங்காரம் !
    கூடிநின்று கிண்டலடித்தல் !
    கல்யாணநேரத்து பரபரப்பு!

    பெண்வீட்டார் மதிக்கவில்லை எனக் கூறி
    வறட்டு பிடிவாதங்கள்!
    சாப்பாடு பரிமாறும் நேரம்...
    நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
    மறுவீடு சாப்பாட்டில்
    மணமகளின் ஜன்னல் பார்வை!
    இவையெதுவுமே கிடைக்காமலே போய்விட்டது...

    கண்டிப்பாய் வரவேண்டும் என்ற
    சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
    சங்கடத்தோடு-ஒரு
    தொலைபேசி வாழ்த்தூனூடே...
    தொலைந்துவிடுகிறது
    நண்பர்களின் நீ..ண்ட நட்பு!

    எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
    நாங்கள்
    அயல்தேசத்து அநாதைகள் தான்!

    காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
    சொந்தங்களின்... நண்பர்களின் ...
    துக்கச் செய்திக்கெல்லாம்
    ஊர் நினைவுகள் மட்டும்தான்...
    ஆறுதல் தருகிறது!

    ஆம்
    இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
    ஒரு கடலைத்தாண்டிய
    கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறார்கள்;!
    இறுதிநாள் நம்பிக்கையில்தான்...
    இதயம் சமாதானப்படுகிறது!

    இருப்பையும் - இழப்பையும்
    கணக்கிட்டுப் பார்த்தால்
    எஞ்சி நிற்பது
    இழப்பு மட்டும்தான்...

    பெற்ற குழந்தையின்
    முதல் ஸ்பரிசம் ...
    முதல் பேச்சு...
    முதல் பார்வை...

    இவற்றின் பாக்கியத்தை
    தினாரும்-திர்ஹமும்-டாலரும்
    தந்துவிடுவதில்லை?

    கிள்ளச்சொல்லி
    குழந்தை அழும் சப்தத்தை...
    தொலைபேசியில் கேட்கிறோம்!

    கிள்ளாமலையே
    நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
    யாருக்குக் கேட்குமோ ?

    பெற்ற குழந்தையின் முகத்தை கூட
    தொலைபேசி வழியாகத்தான்
    உருவகபடுத்தி
    சிலாகித்து கொள்கிறோம்
    யாருக்கு புரியும் எங்கள் ஏக்கம்!.....

    ஒவ்வொருமுறை
    ஊருக்கு வரும்பொழுதும்...
    பெற்ற குழந்தையின்
    முதல் பார்வை...
    நெருங்கியவர்களின்
    மவுணம், திடீர்மறைவு ...

    இப்படி புதிய முகங்களின்
    எதிர்நோக்குதலையும்...
    பழையமுகங்களின்
    மறைதலையும் கண்டு...
    மீண்டும்
    அயல்தேசம் செல்லமறுத்து
    அடம்பிடிக்கும் மனசிடம்...

    குழந்தைகளின் எதிர்காலமும்...
    எதிர்கால பயமும்...
    பொருளாதாரமும் வந்து...
    சமாதானம் சொல்லி
    அனுப்பிவிடுகிறது
    மீண்டும் அயல்தேசத்திற்கு!



    இப்படிக்கு

    அயல் தேசத்து அநாதை


    என்ன நண்பர்களே படிச்சிங்களா உங்கள் நண்பர்களோ அல்லது உங்கள் உடன் பிறந்த சகோதரர்களோ இது போல வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்ககூடும் உங்களுக்கு அவர்கள் ஏக்கம் தெரியாது எதையும் நாமாக நேரிடையாக அனுபவப்படும் போது மட்டுமே அதன் வலியும் தாக்கமும் புரியும் ஆனாலும் இந்த கவிதையை படித்து முடிக்கும் போது வெளிநாட்டில் இருக்கும் உங்களின் வேண்டப்பட்டவர்களின் வலிகளையும் வேதனைகளையும் உங்களால் உணர முடியும் என்றே நம்புகிறேன்..

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    11 Comments
    Comments

    11 Responses to “அயல் தேசத்து அநாதை”

    Mohamed Faaique said...
    October 3, 2011 at 12:19 PM

    வெளி நாட்டில் வசிப்பவர் எவரும் இந்தக் கவிதையை பார்த்து கண் கலங்காமல் இருக்க முடியாது..

    இது நன்பர் யாசர் அரபாத்தின் கவிதயாகும், அவரின் கவிதைகளை அவரது ப்லாக்கில் படிக்க்லாம்
    http://itzyasa.blogspot.com/


    மாணவன் said...
    October 3, 2011 at 4:45 PM

    இந்த கவி வரிகளை படிக்கும் அனைவருமே நெகிழ்ந்துபோவார்கள். நம்மைப் போன்ற உறவுகளைப் பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களின் வலிகள் நிறைந்த உணர்வுகளையுன் ஏக்கங்களையும் வரிகளில் பதிவு செய்திருக்கும் கவிஞருக்கு ஒரு சல்யூட்...


    மாணவன் said...
    October 3, 2011 at 4:47 PM

    //இந்த கவிதையை படித்து முடிக்கும் போது உணர முடிகிறது அதன் வலிகளையும் வேதனைகளையும்..///

    உண்மைதாண்ணே,

    //எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
    நாங்கள்
    அயல்தேசத்து அநாதைகள் தான்! ///

    கவிதையை பகிர்ந்துகொண்டமைக்கு சிறப்பு நன்றிகள்!


    சம்பத்குமார் said...
    October 3, 2011 at 7:53 PM

    வணக்கம் நண்பரே.. இது எனது முதல் வருகை

    கவிதையை படித்தவுடன் இதயத்தில் இனம் புரியா வலி குடிகொண்டுவிட்டது நண்பரே..

    மிக்க நன்றி பகிர்விற்க்கு

    நன்றியுடன்
    சம்பத்குமார்


    சம்பத்குமார் said...
    October 3, 2011 at 7:54 PM

    இன்றிலிருந்து தொடர்கிறேன்

    நட்புடன்
    சம்பத்குமார்


    ஜிஎஸ்ஆர் said...
    October 3, 2011 at 9:28 PM

    @Mohamed Faaiqueஜோடிப்பில்லாத எதார்த்தமான வார்த்தைகளில் மனம் தானே இளகி விடும் எத்தனை உண்மை என்பது இந்த கவிதையில் தெரிகிறது

    இந்த கவிதையில் சில வரிகளை மாற்றியும் சேர்த்தும் எழுதியிருக்கிறேன்...


    ஜிஎஸ்ஆர் said...
    October 3, 2011 at 9:30 PM

    @மாணவன்பிரிவுகளின் போது தான் வலியும் உறவுகளின் அருமை புரியும்..

    இருக்கும் வரை தெரியாது இல்லாமையின் உறவு


    ஜிஎஸ்ஆர் said...
    October 3, 2011 at 9:31 PM

    @மாணவன்இலட்சங்களும், கோமதங்களும் உறவுகளின் நெருக்கத்தை தராது தம்பி...


    ஜிஎஸ்ஆர் said...
    October 3, 2011 at 9:33 PM

    @சம்பத்குமார்வணக்கம் நண்பரே தங்கள் வருகைக்கும் சரியான புரிதலோடு கருத்துரைக்கும் நன்றி...

    உணர்ச்சி வசப்படாதீர்கள் இவைதான் வாழ்க்கையின் எதார்த்தங்கள் என்ன செய்ய வாழ்ந்து தான் ஆக வேண்டியிருக்கிறது ஒரு உச் கொட்டி விட்டு...


    ஜிஎஸ்ஆர் said...
    October 3, 2011 at 9:33 PM

    @சம்பத்குமார்தொடருங்கள் நண்பரே மிக்க சந்தோஷம் நல்லவற்றை தட்டிக்கொடுங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்


    அருள்மொழிவர்மன் said...
    July 1, 2016 at 2:31 PM

    வலி மிகுந்த படைப்பு...முற்றிலும் உண்மை. அருமை..


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர